Published : 13 May 2023 06:25 AM
Last Updated : 13 May 2023 06:25 AM
கோவை: பருத்தி மிகை நாடாக திகழ்ந்த இந்தியா, பருத்தி பற்றாக்குறை நாடாக இவ்வாண்டு மாறியுள்ளது. மொத்த உற்பத்தி 320 லட்சம் பேல்களாக குறைந்துள்ளதாகவும், மத்திய அரசு பருத்திக்கான இறக்குமதி வரியை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித்தொழில், விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக உள்ளது. குஜராத், மஹாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை பருத்தி சீசனாகும். ஆண்டுதோறும் 350 லட்சம் பேல்களுக்கும்(ஒரு பேல் 170 கிலோ பஞ்சு) அதிகமாக பருத்தி உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.
இவ்வாண்டு பருத்தி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறியுள்ளதாக தெரிவித்துள்ள தொழில்துறையினர், பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் கூறியதாவது: ஆண்டுதோறும் செப்டம்பர் தொடங்கி மார்ச் வரையிலான காலகட்டத்தில் சந்தையில் 90 சதவீத பருத்தி விற்பனைக்கு வந்துவிடும். இவ்வாண்டு மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் 60 சதவீத பஞ்சு மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது.
தவிர மொத்த பருத்தி உற்பத்தி 337 லட்சம் பேல்களாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 320 லட்சம் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 30 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யப்படும். 20 லட்சம் பேல்கள் தரம் குறைவு காரணமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் பருத்தி மிகை நாடாக இதுவரை திகழ்ந்து வந்த இந்தியா, பருத்தி பற்றாக்குறை நாடாக மாறியுள்ளளது.
கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளிப்பொருட்கள் ஏற்றுமதி 44 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் 35 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த ஏற்றுமதி 18 சதவீதம் குறைந்துள்ளது. ஜவுளித்தொழில்துறையில் நிலவும் நெருக்கடியால் மொத்த உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. 25 முதல் 30 சதவீதம் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்று (மே 12) ஒரு கேண்டி(356 கிலோ) பஞ்சு விலை ரூ.60,700 ஆக உள்ளது. வெளிநாட்டு பஞ்சு ஒரு கேண்டி ரூ. 51,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அரசு பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கிறது. இதை நீக்கினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி இந்திய சந்தைக்கு வந்துவிடும். தவிர வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு பஞ்சு குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும்.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மத்திய அரசு பஞ்சுக்கு இறக்குமதி வரியை நீக்கியது. அதே போல் தற்போதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். தற்போது உள்ள சூழல் குறித்து ‘சைமா’, ‘சிட்டி’ உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சரை விரைவில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT