Published : 13 May 2023 06:52 AM
Last Updated : 13 May 2023 06:52 AM

செங்கை மாவட்டத்தில் கூடுதலாக 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பரிந்துரை: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

கீரப்பாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருக்கழுகுன்றம் அடுத்த மங்களம் அருகேயுள்ள நியாய விலை கடைகளுக்கான அரிசி குடோனில் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், குடோனில் உள்ள அரிசியின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும், குடோனில் உள்ள அரிசி மூட்டைகளின் இருப்பு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இதில், பலர் தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை தெரிவித்தனர்.

பின்னர், கீரப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அனைத்து துறை செயலர்களும் தங்களின் துறைகளில் களஆய்வு செய்ய வேண்டும் என்ற முதல்வர் உத்தரவின்பேரில், களப்பணியாற்றி ஆய்வு செய்து வருகிறோம். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் செங்கை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் சம்பா இல்லாத நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

கெள்முதல் நிலையங்களில் களஆய்வு செய்ததில் விவசாயிகள் பல்வேறு குறைகளை தெரிவித்துள்ளனர். தற்போது, திருக்கழுகுன்றம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் வெளியில் இருந்து சேமிக்கப்படுகிறது. மேலும், ஒரகடம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கு தொடர்ந்து நெல் வந்து கொண்டிருக்கிறது. டோக்கன் முடியும் வரையில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நிறைய சேமிப்பு குடோன்கள் தேவைப்படுகின்றன. ஏற்கெனவே, நடப்பாண்டில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். 20 நாட்களுக்கு நாள் ஒன்று ஆயிரம் மூட்டைகள் நிரப்புவதற்கு 2 அல்லது 3 கூடுதல் இயந்திரம் வேண்டும். அதற்கான பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. நியாய விலை கடைகளுக்கான குடோன்களும் மேம்படுத்தப்படும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 37.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 4.63 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் ரூ.7,728 கோடி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 2.72 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் பல்வேறு புகார்களை (18005993540) என்ற எண்ணிலும், கடத்தல் தொடர்பான புகார்களை (18005995950) என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x