Last Updated : 27 Oct, 2017 05:02 PM

 

Published : 27 Oct 2017 05:02 PM
Last Updated : 27 Oct 2017 05:02 PM

கோவை செட்டிபாளையம் ஊராட்சியில் செயல்படாத திட்டத்துக்கு ஒன்றுக்கு நான்காக அறிவிப்பு பலகைகள்: சுற்றிலும் சூழலை கெடுக்கும் குப்பைமேடு

கோவை மாநகராட்சியின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி. இங்குள்ள சிறுவாணி சாலை, கோவைபுதூர் சாலை பிரியும் இடத்தில் வடபுறமாக மக்கும் குப்பை, மக்காத குப்பை போடுவதற்காக இரண்டுக்கு நான்காக பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளன. அந்த பள்ளங்கள் முன்பு அதை அறிவிக்கும் விதமாக ஒன்றுக்கு நான்கு அறிவிப்பு பலகைகளும் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அந்த குழிக்குள் யாரும் குப்பை போடுவதில்லை. வெளியில்தான் அத்தனையும் போடுகிறார்கள். ஊராட்சி முழுக்க சேரும் குப்பையில் ஒரு பகுதியை இங்கேதான் கொண்டு வந்து கொட்டுகிறார்கள் துப்புரவுத் தொழிலாளர்கள். இப்படியொரு வேடிக்கையான காட்சி கோவை பேரூர் செட்டிபாளையம் சிறுவாணி சாலையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது .

திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக குழிகள் வெட்டி வைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. என்றாலும் இங்கே குழிக்குள் இல்லாமல் அதைச் சுற்றியே குப்பை போடப்படுகிறது. இதற்கு குப்பையில் இரும்பு, ஈயம், பாட்டில்கள் என பொறுக்குபவர்கள் வேறு அடிக்கடி தீவைத்து விடுகிறார்கள். இதனால் இந்தப் பகுதியே சூழல் கேடுகளால் பாடாய்ப்படுகிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ''இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரொம்ப சொற்ப அளவிலேயே குப்பைத் தொட்டிகள் இருந்தன. இருந்த குப்பைத் தொட்டிகளிலும் உள்ளே குப்பையை போடாமல் வெளியே போடுவது, குப்பைகளுக்கு தீவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர் மக்கள். அதனால் குப்பைத் தொட்டிகள் ஓட்டை விழுவதும், சேதமாவதும் சாதாரணமாக நடந்து வந்தது. பல இடங்களில் புதிய காலனிகள் உருவாகி வந்ததால், அவர்கள் குப்பைத் தொட்டிகள் இல்லாத காரணத்தால் குப்பையை சாலையோரங்களிலேயே போட்டு வந்தனர். இப்படி குப்பையைப் போட்டு சுகாதாரக் கேட்டினை ஏற்படுத்தக்கூடாது. அதை மீறி ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபாரதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கைப் பலகை ஊராட்சித் தலைவர் சார்பாக வைக்கப்பட்டது. அந்த எச்சரிக்கையும் பயன் தரவில்லை.

எனவே குப்பைத் தொட்டிக்கு பதில் காய்கறிகள் வளர்க்க பயன்படுத்தும் பசுமைக்குடில்களுக்கு பயன்படும் பச்சை நிற துணி வலைகளை நான்கு புறமும் கட்டிவைத்து அதில் குப்பை போட ஏற்பாடு செய்தனர் அலுலர்கள். இப்படி செய்வதால் மக்கள் குப்பையை அதில் போடுவார்கள், வலைத் தடுப்பை எளிதாக விலக்கி, குப்பையையும் லாரியில் ஏற்றலாம் என்றும் இந்த ஏற்பாட்டை செய்தார்கள். இருந்தும் பயனில்லை. குப்பையை வெளியிலேயே போட்டனர். பச்சை வலைகளும் காலாவதியாகிப் போயின. இதையடுத்து இந்த திட்டத்தை கைவிட்ட ஊராட்சி கோவைபுதூர் சாலையும், சிறுவாணி சாலையும் சந்திக்கும் பகுதிக்கு அப்பால் இருந்த மயானத்தை ஒட்டி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்தது. அதற்காக நிதி ஒதுக்கி மக்கும் குப்பை மக்காத குப்பை போடுவதற்கு தனித்தனியே பள்ளங்கள் வெட்டி அதில் குப்பை போடுமாறு அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டன.

இது நடந்தும் வருடம் இரண்டாகி விட்டது. இங்கே யாரும் குழிக்குள் குப்பை போடுவதில்லை. அறிவிப்புப் பலகைகளும், குழிகளும் மட்டும் பளிச்சென்று உருவாக்கி வைத்தது வைத்தபடியே இருக்கிறது. சுற்றிலும் குப்பைக் காடுதான். தீ வைப்புதான். இத்தனைக்கும் இதன் எதிர்புறமேதான் ஊராட்சி அலுவலகம். இந்த வழியேதான் கோவைக்குற்றாலம், ஈசா, வெள்ளியங்கிரி மலை செல்லும் சுற்றுலா பயணிகளும் செல்கிறார்கள். இதற்கு அரைகிலோமீட்டர் தூரத்தில்தான் புராதனப் பெருமை மிக்க பேரூர் பட்டீஸ்வரர் கோயிலும் உள்ளது. இருந்தும் என்ன புண்ணியம். இந்த குப்பை சூழல் கேட்டை சரிசெய்யத்தான் மாட்டேங்கிறாங்க!'' என்றனர்.

இது பற்றி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியின் செயல்அலுவலர் செந்தில்குமாரிடம் பேசினோம். ''திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக தொடங்கவே அந்த இடத்தில் குழிகள் அமைக்கப்பட்டு குப்பைகள் கொட்டப்பட்டன. அதற்கு உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பு. அது மயானத்திற்கான இடம். அங்கே இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு மாற்று இடம் தேடி வருகிறோம். அது இன்னமும் கிடைத்தபாடில்லை. அப்படி கிடைத்ததும், இந்த திட்டம் அங்கே சென்றுவிடும்!'' என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x