

சேலம்: சேலத்தில், 449 மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள நரிக்குறவர் இன மாணவர், சாதிச்சான்றிதழ் கிடைக்காததால், கல்லூரியில் சேர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
சேலம் குகை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சுரேஷ்பாபு மகன் நந்தகுமார். இவர், குகை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் 449 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில், உயர்கல்வி சேர்க்கைக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் இருப்பதாகக் கூறி, தனது தாய் நதியாவுடன் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
மனு குறித்து அவர் கூறியது: கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, இந்து நரிக்குறவர் (எஸ்.டி.) சாதிச்சான்றிதழ் தேவைப்படுகிறது. இதற்காக விண்ணப்பித்து, 15 நாட்களாகியும் இதுவரை சான்றிதழ் கிடைக்கவில்லை. எங்கள் குடியிருப்பு அமைந்துள்ள பஞ்சந்தாங்கி ஏரி பகுதியில், என்னைப் போல மேலும் பல மாணவர்களும், இதேபோல சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எங்களுக்கு சாதிச்சான்றிழ் தாமதமின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.