Published : 13 May 2023 06:16 AM
Last Updated : 13 May 2023 06:16 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அரசுப் போக்குவரத்து கழகம் இயக்கும் குளிர்சாதன பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் இப்பேருந்துகளில் குளிர்சாதன வசதி பழுது காரணமாகவும், போதிய அளவுக்கு பேருந்துகளில் குளிரூட்டும் அளவுக்கு குளிர் சாதன இயந்திரம் வேலை செய்ய வில்லை என்றும் பயணிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை என்று நடுவழியில் பேருந்துகளை நிறுத்தி பயணி களை மாற்றுப் பேருந்துகளில் ஏற்றி அனுப்பும் நிலையும் நீடிக்கிறது.
இது தொடர்பாக திருநெல் வேலி மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் எம். முஹம்மது அய்யூப், தமிழக போக்குவரத்துத்துறை அமைச் சருக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலியிலிருந்து கடந்த 4-ம் தேதி மதுரைக்கு சென்ற மதுரை அரசு போக்குவரத்துக் கழக குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்தோம். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு செல்ல பயணச்சீட்டு பெற்றிருந்தோம்.
மதுரைக்கு செல்வதற்கு சற்றுநேரத்துக்கு முன் திடீரென்று பேருந்தை ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தினார். குளிர்சாதன கருவி பழுதாகிவிட்டதால் அனைத்து பயணிகளும் கீழே இறங்குமாறு தெரிவித்தார். மாற்று பேருந்தில் அனுப்பி வைப்பதாக பேருந்தின் நடத்துனர் கூறினார்.
பயணிகள் வாக்குவாதம்: மதுரைக்கு செல்லக்கூடிய பல அரசு பேருந்துகளை ஓட்டுநரும், நடத்துனரும் நிறுத்தியும் அதை அவர்கள் கண்டு கொள்ளாது சென்று விட்டனர். இதனால் பயணிகளுக்கும் பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்டநேரம் காத்திருப்புக்குப்பின் மாற்றுப்பேருந்தில் பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்துகளின் உதிரி பாகங்கள் சில நேரங்களில் பழுதாகி பேருந்துகள் வழியில் நின்றுவிடுவதை பயணிகள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் குளிர்சாதன கருவி பழுது காரணமாக பயணிகளை மாற்றுப் பேருந்தில் ஏற்றி விடுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குளிர்சாதன கருவி பழுதானால் பேருந்திலுள்ள வலது, இடதுபுறத்திலுள்ள கண்ணாடிகளை மாற்றம் செய்து தொடர்ந்து அதே பேருந்தில் பயணத்தை தொடர செய்யலாம். பயணிகளுக்கும் சிரமமில்லாத பயணமாக அமையும்.
ஆனால் தற்போதுள்ள குளிர்சாதன பேருந்துகளில் திறந்து மூட முடியாத வகையில் கண்ணாடி கள் பொருத்தப்பட்டுள்ளது. இதை மாற்றி திறந்துமூடும் வகையில் கண்ணாடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும என்று மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சாதாரண கட்டணத்தில் 500 குளிர்சாதன பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கி வருவதாக தெரிகிறது.
இப் பேருந்துகளில் குளிர்சாதன வசதிகளில் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யவும், அவ்வப்போது பராமரிப்பு செய்யவும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும். குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை என்று பயணிகளை பாதி வழியில் இறக்கிவிடுவது அரசுப் போக்குவரத்து கழகங்களின் சேவை குறைபாடாகும்.
இதனால் பாதிக்கப்படும் பயணிகள் நுகர்வோர் நீதிமன்றங்களிலும், நிரந்தர மக்கள் நீதிமன்றங்களிலும் அரசு போக்குவரத்து கழகங்களின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி வழக்கு தொடரலாம் என்று வழக்கறிஞர்கள் தெரிவிக் கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT