

சென்னை: "தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் வாரிய உறுப்பினர்களை விரைவாக சென்று சேர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ், வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலத்தில் வெள்ளிக்கிழமை (மே 12), தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூடத்தில் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் பேசுகையில், "தமிழக முதல்வரின் தலைமையிலான இந்த அரசானது, தொழிலாளர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு காணும் நோக்கத்திலும் செயல்படும் அரசாக இருந்து வருகிறது. முதல்வர் தலைமையிலான இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் தொழிலாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை அறிவித்து தொழிலாளர்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது" என்று பேசினார்.
மேலும், இக்கூட்டத்தில் தொழிலாளர் ஆணையரக செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். தொழிலாளர் துறை அலுவலர்கள் மேலும் சிறப்பாக செயல்பட கீழ்காணும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.