காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபர் கைது

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆக்ரோஷமான காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரக பகுதி, யானைகளின் வாழ்விடமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்களில் இருந்து இறங்கவும் கூடாது என வனத்துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒகேனக்கல் அருகே சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று சாலையோரம் நடமாடி வருகிறது. இந்த யானையை அவ்வழியே வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர். இந்நிலையில், புதன்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த ஒரு குழுவில் இடம்பெற்றிருந்தவர் ஒற்றை யானையை பார்த்ததும் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளார்.

பின்னர் யானைக்கு வெகு அருகில் நடந்து சென்று வணங்கியுள்ளார். அதன்பிறகு, யானைக்கு முதுகு காட்டியபடி நின்று கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இவரது இந்த செய்கைகளின்போது அந்த ஒற்றை யானை மண்ணை காலால் உதைத்து சிதற விட்டும், செடிகளை ஆக்ரோஷமாக வளைத்து மிதித்தும் பிளிறுகிறது. சுமார் 1 நிமிடம் வரை அவர் இவ்வாறு யானை அருகே நின்று சேட்டைகளை செய்துவிட்டு திரும்பிச் செல்கிறார். இந்த காட்சிகளை அவருடன் வந்தவர்கள் வீடியோ பதிவாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in