

சென்னை: ஏதோ ஒரு சூழ்ச்சியில்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து இருந்தார். அதில், நான், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வம் உடன் செல்லவில்லை என்றும், எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். அதிமுக ஒன்று சேர்ந்து, மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை சந்தித்தார்.
ஆனால், எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்று முன்னாள் முதல்வர் கற்பனையில் பேசுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல. இவ்வாறு பொய் சொல்லி ஏதோ ஒரு சூழ்ச்சியில் தான் அவர் முதல்வர் ஆனார். மாயமான் இல்லை என்றால் இவர் முதல்வராக இருந்து இருக்க முடியாது. மண் குதிரை என்கிறார். இபிஎஸ் ஒரு சண்டிக் குதிரை. இந்தக் குதிரை எதற்கும் பயன்படாது." இவ்வாறு அவர் கூறினார்,