கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பது நிறுத்திவைப்பு

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பது நிறுத்திவைப்பு
Updated on
1 min read

கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் நடமாடும் பகுதியான எண்.22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, வரப்பாளையம் சாலை, ஸ்ரீநகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடையைத் திறக்க மும்முரமாக பணிகள்நடந்து வந்தன. இந்த இடமானது வன எல்லையில் இருந்து ஒன்றரை கி.மீ. தூரமே உள்ளது. அத்துடன் அருகிலேயே குடியிருப்பு பகுதி, பள்ளி, மகளிர் கல்லூரி உள்ளது.

யானைகள் நடமாடும் இடம் என்பதால் மதுகுடித்து விட்டு இரவில் நடந்து செல்வோர் யானை தாக்கி உயிரிழக்கவும், மதுபாட்டில்களை தூக்கி எறிந்துவிட்டு சென்றால், அவை உடைந்து யானைகளின் கால்களை பதம்பார்க்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அங்கு மதுபான கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என வன உயிரின ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, அங்கு டாஸ்மாக் கடை திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக அதிகாரிகள் நேற்று கூறும்போது, ‘‘பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த பகுதியில் மதுபான கடையை திறக்க வேண்டாம் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அங்கு மதுபானகடையை திறக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் முழுவதுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன” என்றனர். மேலும், புதிதாக அமைய இருந்த மதுபான கடையை மூடுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வனத்துறையினரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in