Published : 12 May 2023 06:11 AM
Last Updated : 12 May 2023 06:11 AM

சிட்கோ தொழிற்பேட்டை ஒதுக்கீட்டுதாரர்கள் 208 பேருக்கு தொழில் மனைப் பட்டா: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

சென்னை: சிட்கோ தொழிற்பேட்டை மனை ஒதுக்கீட்டுதாரர்கள் 208 பேருக்கு, தொழில் மனைப் பட்டாக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார். சிட்கோ தொழிற்பேட்டையில் மனை ஒதுக்கீட்டுதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 208தொழில்முனைவோருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனைப் பட்டாக்களை வழங்கி சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: 1970-ல் முன்னாள் முதல்வர்கருணாநிதி ஆட்சியில், குறு, சிறு,நடுத்தர தொழில்முனைவோருக்கான சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் 14, 983 தொழில் மனைகளுடன், 127 தொழிற்பேட்டைகள் இயங்கிவருகின்றன. 60 தொழிற்பேட்டைகளில் உள்ள 3,700 ஏக்கர் நிலம், அரசு புறம்போக்கு வகைப்பாட்டில் இருப்பதால், தொழில் நிறுவனங்கள் கிரயப் பத்திரம் பெற்றிருந்தாலும், பட்டா பெற முடியாத நிலை நீண்டகாலமாக இருந்து வந்தது.

இதனால், தொழில்முனைவோர் நிலத்தை அடமானம் வைத்து, கடன் பெற முடியாமல், பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். திமுக அரசு பொறுப்பேற்றதும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமென அரசிடம் தொழில்முனைவோர் கோரிக்கை வைத்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கோரிக்கைகளின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, நில வகைப்பாட்டை மாற்ற 2021 நவ. 30-ம் தேதி தலைமைச் செயலர் தலைமையில், அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

பட்டா வழங்கப் பரிந்துரை: இந்தக் குழு முதல்கட்டமாக 32 தொழிற்பேட்டைகளில், 1,569ஏக்கர் நிலங்களுக்கான வகைப்பாட்டை மாற்றி, பட்டா வழங்கப் பரிந்துரைத்தது. அதன்படி அரசாணைகள் வெளியிடப்பட்டன. இதனடிப்படையில், 1,245 ஏக்கர் நிலம், பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நிலமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 28-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்த 5 தொழில்முனைவோருக்கு பட்டா வழங்கி, இந்ததிட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார்.

70 ஏக்கர் நிலத்துக்கு பட்டா: அதன் தொடர்ச்சியாக, தற்போது 9 தொழிற்பேட்டைகளில் உள்ள, 208 தொழில்முனைவோருக்கு 70 ஏக்கர் பரப்பிலான நிலத்துக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக பட்டா வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து, சிட்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் மறைந்த 2 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும், சிட்கோ தொழிற்பேட்டையில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் 25 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகளையும் அமைசசர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துறைச் செயலர் வி.அருண்ராய், சிட்கோமேலாண்மை இயக்குநர் சோ.மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x