

சென்னை: மதுபோதையில் தாறுமாறாக ஓட்டப்பட்ட பேருந்தை மடக்கி நிறுத்தி, அதில் இருந்த பயணிகளைகாப்பாற்றிய காவல் உதவி ஆணையருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாதத்தின் நட்சத்திர காவல் விருதை வழங்கினார்.
கடந்த மார்ச் 16-ம் தேதி இரவு ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உதவி ஆணையர் சார்லஸ் சாம் ராஜதுரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக அரசு பேருந்து ‘தடம் எண் 5 சி’ சென்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்து சென்ற அந்தபேருந்தில் இருந்த பயணிகள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.
இதை கவனித்த உதவி ஆணையர் விரைந்து சென்று பேருந்தை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் தெரிவித்தார். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றது. இதையடுத்து தனது வாகனத்தில் விரட்டிச் சென்று பேருந்தை மடக்கி உதவி ஆணையர் நிறுத்தினார். அதன் பின்னர்தான் பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாற்று பேருந்து ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு பேருந்து பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
துரிதமாக விழிப்புடன் செயல்பட்டு பேருந்து பயணிகளை காப்பாற்றியதால் மாதாந்திர நட்சத்திர காவலர் விருதுக்கு உதவிஆணையர் சாம் ராஜதுரைதேர்வு செய்யப்பட்டார் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
இந்த விருதுடன் ரூ.5 ஆயிரம்வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சார்லஸ்சாம் ராஜதுரை தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவுகூடுதல் காவல் கண்காணிப்பாளராக உள்ளார்.