Published : 12 May 2023 06:05 AM
Last Updated : 12 May 2023 06:05 AM
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு புகார்களை பெற புகார் பெட்டி கட்டாயம் வைக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு,தடை மற்றும் தீர்வு) சட்டம்-2013 மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு புகார்களை பெற்றுக் கொள்வதற்காக, 10-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களைக் கொண்ட எந்த ஒரு அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களிலும் சட்டப் பிரிவு 4-ன் படிபுகார் குழு அமைக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினை குறைந்தபட்சம் 5 உறுப்பினர்களை கொண்டு அமைத்திட வேண்டும். அவற்றில் பெரும்பாலானோர் பெண்களாக இருத்தல் வேண்டும். மேலும், அந்தந்த நிறுவனங்களில் இச்சட்டத்தின் கீழ் புகார் அளிப்பதற்கு ஏதுவாக புகார் பெட்டி அமைத்திட வேண்டும். இச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகாரின் மீது உள்ளக புகார் உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அக்குழுவின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை மனுதாரருக்கு திருப்தி அளிக்கவில்லையெனில் உள்ளூர் புகார் குழுவில் மேல்முறையீடு செய்யலாம். பிரிவு 11-ன் கீழ் உள்ளூர் புகார் குழுவில் எந்த ஒரு நிறுவனத்தில் 10 நபர்களுக்கு குறைவாக பணியாளர் உள்ளனரோ அல்லது வீட்டு வேலை செய்பவர்களில் பாதிக்கப்பட்டுள்ள நபர் நேரடியாக தனது முதலாளிக்கு எதிராக உள்ளூர் புகார் குழுவில் மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இச்சட்டத்தின் கீழ் இதுவரை உள்ளக புகார் குழு அமைக்காத அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் விரைந்து குழு அமைத்திட மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் பணியிடங்களிலேயே புகார் அளிப்பதற்கு ஏதுவாக புகார் பெட்டி அமைத்திட கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT