Published : 10 Oct 2017 03:31 PM
Last Updated : 10 Oct 2017 03:31 PM

காசநோய் ஒழிப்பையும் தனியார் மயமாக்குவதா?- சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்

மக்கள் நலன் காக்கும் பொதுசுகாதாரத் துறையை பலவீனமாக்கும் வகையில், மக்கள் வரிப்பணத்தை தனியார் அமைப்புகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் ,பயனடையும் வழியில் வாரி வழங்குவதை கைவிட்டு ,பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்த முன்வர வேண்டும் என சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று(10/10/17)விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

”மருத்துவம் நாடு முழுவதும் தனியார் மயமாக்கப்படுவதாலும்,கார்ப்பரேட் மயமாக்கப்படுவதாலும், அரசுப் பொது மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதாரத்துறை திட்டமிட்டு வலுவிலக்கச் செய்யப் படுவதாலும் ஏழை எளிய மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

டெங்கு ,சிக்குன்குனியா,பன்றிக் காய்ச்சல்,குழந்தைகளை அதிகம் தாக்கும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்,மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதிலும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் , காசநோய் இல்லாத சென்னையை உருவாக்கப் போகிறோம் என்ற முழக்கத்தோடு, சென்னை மாநகராட்சி காசநோயாளிகளை கண்டுபிடித்தல் மற்றும் குணப்படுத்துதலை தனியார் அமைப்பிடமும்,தனியார் மருத்துவமனைகளிடமும் விட தமிழக முதல்வரின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துள்ளது. இது கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலன்களுக்கு எதிரானது.

ஏற்கனவே,சென்னை மாநகராட்சி மலேரியா ஒழிப்புப் பணிகளையும் தனியார் மயமாக்கியுள்ள நிலையில் ,இப்பொழுது காசநோய் ஒழிப்புப் பணியையும் தனியாரிடம் ஒப்படைப்பது நோய் ஒழிப்புப் பணியில் தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும். மத்திய அரசின் நிர்பந்தத்தால் ,தமிழக அரசும் அதன் கீழ் இயங்கும் உள்ளாட்சி அமைப்புகளும் மருத்துவ சேவை வழங்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பது மக்கள்விரோத நடவடிக்கையாகும்.

தற்பொழுது டெங்குக் காய்ச்சல் பரவலை தடுக்க முடியாமல் திணறுவதற்கும்,ஏராளமான நோயாளிகள் இறப்பதற்கும் மிக முக்கியக் காரணம் பொதுச் சுகாதாரத்துறை பலவீனப்படுத்தப் பட்டதேயாகும். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் இச்செயல் எரியும் நெருப்பில் எண்ணெய்யை வார்ப்பது போல் உள்ளது. அதுவும் குறிப்பாக காச நோய் ஒழிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது மிக மோசமான விளைவுகளையே உருவாக்கும்.

கி.பி.2025 க்குள் காசநோயை ஒழித்தல் என்ற மத்திய அரசின் திட்டம், தனியார் மயமாக்கல் மூலம் நிறைவேறாது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் காசநோய்க்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களில் 27 விழுக்காட்டினரும் , காசநோயால் இறப்பவர்களில் 29 விழுக்காட்டினரும் இந்தியாவில் தான் உள்ளனர். இந்தியாவில் 2014 ல் 2லட்சத்து 20 ஆயிரம் பேர் காசநோயால் இறந்தனர்.

காசநோய் ஒழிப்புற்கு போதிய நிதி ஒதுக்காததின் காரணமாகவும் ,இந்த எண்ணிக்கை 2015 ல் 4லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்தது. மருந்துகளுக்கு எதிர்ப்பாற்றலை பெற்ற காசநோயாளிகளின் எண்ணிக்கை 2015 ல் 79 ஆயிரம் ஆக இருந்தது.இது 2014 விட 11 விழுக்காடு அதிகமாகும்.

காசநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் காச நோய்க்காக சிகிச்சை பெறுவோரில் 20 லட்சம் பேர் தனியார் மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுகின்றனர்.நோயாளிகள் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்கின்றனர். இந்நிலையில், நோயாளிகளுக்கு தரமான இலவச சிகிச்சையை அரசு மருத்துவத் துறை மூலம் வழங்காமல், தனியாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது ஏழை நோயாளிகளை பாதிக்கும்.காசநோயை ஒழிக்க உதவாது.

காசநோய் ஒழிப்பிற்காக ஒதுக்கப்படும் குறைந்த பட்ச நிதியைக் கூட தனியார் மருத்துவமனைகள் அபகரிக்கவே வழிவகுக்கும். தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சார்பில் 14.07.2017 முதல் ஆகஸ்ட் 4 வரை ,காச நோயால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க ,காசநோயால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்களுக்காக நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் 27 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டனர்.

அதில் 3100 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இப்படி சிறப்பாக செயல்படும் பொதுசுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி வலுப்படுத்தாமல் தனியாருக்கு உதவலாமா? தமிழக அரசு 2015 ஆம் ஆண்டு ரூ 120 கோடியை சென்னையில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனைக்கு வாரிவழங்கியது.

இந்த ரூ 120 கோடி நிதியின் மூலம் பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் புற்று நோய் பிரிவை உருவாக்கி இருக்க முடியும். கடந்து 5 ஆண்டுகளில் ரூ 1600 கோடியை முதல்வர் காப்பீடு முலம் தனியார் மருத்துவமனைகள் லாபமாக ஈட்ட தமிழக அரசு உதவியுள்ளது. இந்த ரூ 1600 கோடியில் 8 மருத்துவக் கல்லூரிகளையே உருவாக்கி இருக்க முடியும்.

தற்பொழுது காசநோய் சிகிச்சைக்கும் நிதியை தனியாருக்கு வாரி வழங்குகிறது. மக்கள் வரிப்பணத்தை தனியார் அமைப்புகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் ,பயனடையும் வழியில் வாரி வழங்குவதை கைவிட்டு ,பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்த முன்வர வேண்டும் என சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x