

ஆம்பூர்: மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வந்த அவசர சிகிச்சை பிரிவை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட முயன்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, அவசர சிகிச்சை பிரிவும் இயங்கி வந்தது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாதனூர் அமைந்துள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற்று பயனடைந்து வந்தனர். மேலும், மாதனூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வரும் அவசர சிகிச்சை பிரிவை தற்போது மூட உத்தர விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையறிந்த பொதுமக்கள், மாதனூர் அவசர சிகிச்சை பிரிவை மூடக்கூடாது. தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாதனூர் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவு மூடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்பந்தமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர்ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகபொதுமக்களிடம் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.