

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆக்ரோஷமான காட்டு யானை அருகே சென்று வணங்கிய போதை நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரக பகுதி, யானைகளின் வாழ்விடமாக உள்ளது. இங்கு, சின்னாற்றுப் படுகையையொட்டி வசிக்கும் யானைகள் வனச்சரக பகுதி முழுக்க நடமாடுவது வழக்கம். தருமபுரி-ஒகேனக்கல் சாலையில் ஒகேனக்கல் வனப்பகுதி சாலையோரம் இந்த யானைகள் சில நேரங்களில் கூட்டமாக முகாமிடும். சில நேரங்களில் ஒற்றை யானை மட்டும் சாலையோரம் நடமாடும். எனவேதான், வனப்பகுதியில் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்களில் இருந்து இறங்கவும் கூடாது என வனத்துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒகேனக்கல் அருகே முண்டச்சிப் பள்ளம் என்ற பகுதியில் சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று சாலையோரம் நடமாடி வருகிறது. இந்த யானையை அவ்வழியே வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர். இந்நிலையில், நேற்று(புதன்) ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த ஒரு குழுவில் இடம்பெற்றிருந்தவர் ஒற்றை யானையை பார்த்ததும் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளார்.
பின்னர் யானைக்கு வெகு அருகில் நடந்து சென்று வணங்கியுள்ளார். அதன்பிறகு, யானைக்கு முதுகு காட்டியபடி நின்று கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இவரது இந்த செய்கைகளின்போது அந்த ஒற்றை யானை மண்ணை காலால் உதைத்து சிதற விட்டும், செடிகளை ஆக்ரோஷமாக வளைத்து மிதித்தும் பிளிறுகிறது.
ஆனாலும், மது போதையில் இருந்த அந்த நபர் விபரீதம் உணராமல் யானை அருகில் சென்று நிதாமனாக மேற்கண்ட செய்கைகளில் ஈடுபட்டுவிட்டு வாகனத்தை நோக்கி திரும்புகிறார். சுமார் 1 நிமிடம் வரை அவர் இவ்வாறு யானை அருகே நின்று சேட்டைகளை செய்துவிட்டு திரும்பிச் செல்கிறார். இந்த காட்சிகளை அவருடன் வந்தவர்கள் வீடியோ பதிவாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து, சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‘ஒற்றை யானை எப்போதுமே ஆபத்தானவை. இதுபோன்ற யானைகள் திடீரென தாக்கத் தொடங்கி விடும். குறிப்பாக வீடியோவில் உள்ள அந்த யானையும் போதை நபர் நெருங்கிச் செல்லும்போது தனது கோபத்தை ஆக்ரோஷமான தனது நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்துகிறது.
ஆனாலும், அந்த வீடியோவில் உள்ள நபர் மிக ரிலாக்ஸாக அந்த யானை அருகில் நின்று கும்பிடு போட்டுவிட்டு, திரும்பி நின்று கைகளை உயர்த்தியபடி போஸ் கொடுத்து சேட்டைகளில் ஈடுபட்டு திரும்புகிறார். நல்வாய்ப்பாக விபரீதம் எதுவும் நிகழவில்லை என ஆறுதலடைந்து கொள்ள வேண்டியுள்ளது. அதேநேரம், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.