Published : 17 Oct 2017 06:10 PM
Last Updated : 17 Oct 2017 06:10 PM

சென்னையில் களைகட்டியது பட்டாசு விற்பனை: தீவுத்திடலில் குவிந்த மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடல் வளாகத்தில் பட்டாசு விற்பனை களை கட்டியது. மழை குறைந்ததால் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் ஒரு காலத்தில் பட்டாசு விற்பனை என்றால் பாரிமுனை பூக்கடை பகுதியைத்தான் சொல்வார்கள். கோயம்பேடு பேருந்து நிலையமும், மார்க்கெட்டும் கட்டாத நேரம், சென்னையின் பேருந்து போக்குவரத்து மையம் பாரிமுனையில் இருந்தபோது , கொத்தவால் சாவடியின் பந்தர் தெரு, ஸ்ட்ரிங்கர் தெரு என அனைத்து தெருக்களிலும் பட்டாசு விற்பனை ஜோராக இருக்கும்.

தீபாவளியின் அதிகாலை வரை பயணிகள் சொந்த ஊர் செல்ல பாரிமுனைக்கு வருவார்கள். அதனால் பேருந்து நிலையம் எதிரில் உள்ள கொத்தவால் சாவடி, மற்றும் பூக்கடை பகுதி முழுதும் பட்டாசு விற்பனை சில்லறையாகவும், மொத்தமாகவும் விடிய விடிய விற்பனை நடக்கும்.

ஆனால் பூக்கடை பேருந்து நிலையமும், கொத்தவால் சாவடியும் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டப்பிறகு பட்டாசு விற்பனையும் மாறிப்போனது. சென்னை பூக்கடையில் விற்கப்படும் பட்டாசுகள் பாதுகாப்பு, நெருக்கடி காரணமாக தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது. தீவுத்திடலில் மொத்த விற்பனை ஸ்டால்கள் திறக்கப்பட்டது.

ஆரம்பத்தில் 100 ஸ்டால்கள் வரை திறக்கப்பட்ட தீவுத்திடல் விற்பனை மையத்தில் இந்த ஆண்டு 60 ஸ்டால்கள் மட்டுமே இயங்குவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் மழையால் பாதிக்கப்பட்டாலும், இன்று மழை இல்லாத காரணத்தால் இன்று வியாபாரம் பரவாயில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இங்கு பட்டாசுகள் மொத்த விற்பனை என்பதால் தரமானதாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற இடங்களைவிட 20% முதல் 25% தள்ளுபடியும் கொடுப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இன்றிரவு 11 மணி வரை வியாபாரம் நடக்கும் என்றும் நாளையும் மதியம் வரை விற்பனை உண்டு என்று தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரியால் பட்டாசு விலை சற்று கூடி உள்ளதாக தெரிவித்த வாடிக்கையாளர்கள், தீவுத்திடலுக்கு ஆண்டுதோறும் வரும் வாடிக்கையாளர் எப்போதும் இங்கு விரும்பி வருவர் என தெரிவித்தனர்.

காரணம் கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் உள்ளது நிதானமாக பார்த்து பொருட்களை வாங்கலாம், மேலும் புதுப்புது ரகங்களில் பட்டாசுகள் வந்துள்ளதால் மற்ற இடங்களை விட இங்கு வருவதையே பொதுமக்கள் விரும்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x