600-க்கு 600 மதிப்பெண் பெற்ற சாதனை மாணவி நந்தினிக்கு தங்கப் பேனா வழங்கி கவிஞர் வைரமுத்து பாராட்டு
திண்டுக்கல்: பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினியின் வீட்டிற்குச் சென்ற கவிஞர் வைரமுத்து மாணவிக்கு தங்கப்பேனா வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் பொன் சீனிவாசன் நகரில் உள்ள மாணவி நந்தினியின் வீட்டிற்கு இன்று காலை கவிஞர் வைரமுத்து வருகை தந்தார். மாணவியின் இல்லத்தில் அவருக்கு தங்கப்பேனா வழங்கிய பாராட்டுக்கள் தெரிவித்தார். அப்போது மாணவியின் பெற்றோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய கவிஞர் வைரமுத்து கூறியதாவது: "ஒரு எளிய குடும்பத்துபெண் தமிழக அளவில் அறியப்பட்டு, உலகமெல்லாம் அறியப்பட்டு அவர் யார் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அனைத்திற்கும் காரணம் கல்வி. கல்வியின் வெற்றி. நந்தினியை நான் ஒரு அதியசமாக பார்க்கிறேன். கல்வியின் குறியீடாக பார்க்கிறேன். அவர் பெற்ற மதிப்பெண் வரலாற்றில் யாரும் தொடாதது.
ஆறு தாள்களும் வெவ்வேறு ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். அந்த ஆறு ஆசிரியப் பெருமக்களும் 100க்கு 100 என மதிப்பிடுவது வரலாற்றில் இல்லாதது. இதை கல்வி உலகம் கொண்டாடவேண்டும். மாணவியின் ஆசிரியர்களை கொண்டாடுகிறேன். கல்விக்கும் செல்வத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏழ்மை நிலையிலும் கல்வி பெருகிவரும் என்பதற்கு நந்தினி ஒரு எடுத்துக்காட்டு. எல்லா மாணவர்களும் வாழ்க்கையில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் நந்தினி தொட்ட சிகரத்தை அனைவரும் தொட்ட முடியும்.
கல்வி உலகம் தேர்வுக்கு போனபின் இரண்டு உலகமாக பிரிகிறது. ஒன்று வெற்றிகண்ட உலகம், மற்றொன்று தேர்ச்சி பெறாத உலகம். தேர்ச்சி பெறாத உலகத்தினர் தான் கண்காணிக்க தக்கவர்கள். தோல்வியடைந்த மாணவர்களை தத்தெடுத்து ஆற்றுப்படுத்தி அவர்களை வெற்றிப் பட்டியலில் சேர்க்க பாடுபட வேண்டும். அப்போது தான் மாணவர்கள் உலகம் சமத்துவம் பெறும். தோல்வியடைந்த மாணவர்கள் மறு தேர்வு எழுதி அதில் யார் முதல் மதிப்பெண் எடுக்கிறார்களோ அவருக்கும் பரிசுதர வேண்டும்.
உன் அனுபவங்களை பள்ளி மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். அப்போது தான் வெற்றிபெற்ற ஒருவர் எப்படி உச்சம் தொட்டார் என தெரியும் மாணவி நந்தினியை பள்ளிகள் அழைத்து தங்கள் மாணவர்களுக்கு வெற்றியை பகிர்ந்துகொள்ள செய்ய வேண்டும்" என கவிஞர் வைரமுத்து கூறினார்.
கவிதை மூலம் நன்றி தெரிவித்த மாணவி நந்தினி: "கல்வி என்ற ஒரு விஷயம் எவ்வளவு பெரிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதை நேருக்கு நேர் பார்த்துள்ளேன். எல்லோருக்கும் எனது வெற்றியை பகிர்ந்துகொள்வது, அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மற்ற மாணவர்களை ஊக்குப்படுத்தும் விதமாக பணியாற்றுவேன். ஐயா அவர்களுக்கு ஒரு கவிதை மூலம் நன்றி சொல்கிறேன்.
"மின்னியது கவிக்குலத்தின் வைரம் எனது வீட்டில், அதனால் இருள் எல்லாம் அகன்று ஒளிர்கிறது எங்கள் வையம், எனது நன்றிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நான், வேறு வழியின்றி கவிதைதொடுத்து, அவருக்கு எனது நன்றிகளை உரித்தாக்க விரும்புகிறேன்" என மாணவி நந்தினி கூறினார்.
