

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்ததில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் அண்மையில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் சடங்குகள் செய்வதற்காக இன்று (வியாழன்) காலை அரவிந்தன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் 67 பேர் பேருந்து ஒன்றில் ஒகேனக்கல் சென்று கொண்டிருந்தனர்.
பென்னாகரத்தை கடந்து ஒகேனக்கல் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆஞ்சநேயர் கோயிலை கடந்து சென்ற போது சாலை வளைவு ஒன்றில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
விபத்தில் காயம் அடைந்தவர்களை ஒகேனக்கல் போலீஸார் மற்றும் ஊர்வாசிகள் இணைந்து மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஒகேனக்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.