Published : 21 Oct 2017 11:12 AM
Last Updated : 21 Oct 2017 11:12 AM

மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி கருத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை: திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து

மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி, சமூகப் பிரச்சினைகள் குறித்த காட்சிகள் மற்றும் வசனங்கள் பொதுமக்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் தான். அந்த காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் இரண்டாவது அகில இந்திய மாநாடு மதுரையில் நவ.4 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான சாதி ஒழிப்பு-சமத்துவ கலை விழா மதுரை செல்லூரில் நேற்று நடைபெற்றது.

முன்னதாக தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி வரவேற்பு குழுத் தலைவரான திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இடஒதுக்கீடு, கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறை, தலித்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, பஞ்சமி நிலங்கள், ஆணவக் கொலைகள், சாதி மறுப்பு திருமணங்கள் ஆகியவற்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, சமூகப் பிரச்சினைகள் குறித்த காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள் மனதில் தோன்றும் எண்ணங்களே திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

அம்பேத்கரை மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தலைவர்களை தங்கள் அடையாளமாக மாற்றிக்கொள்ள பாஜக முயற்சி செய்கிறது. பெரும்பாலான கட்சிகள் அவரது அடையாளத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. இவை ஒருபோதும் வெற்றி பெறாது.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கியிருப்பதன் மூலம் கேரள முதல்வர் பினராயி விஜயன் மதவாத, சாதியவாத சக்திகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் அதுபோன்று மாற்றம் நிகழ வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x