

மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தையடுத்து, அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் என்.ராஜாராமன் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை போரூர் மவுலி வாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. சதுப்பு நில பாதுகாப்பு மற்றும் நிர்வாகச் சட்டம் - 2010 இயற்றப் பட்டு, அனைத்து மாநில அரசுகளும் சதுப்பு நிலங்கள் குறித்த பட்டியலை ஓராண்டுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், எந்த மாநில அரசும் இதுவரை சதுப்பு நில பாதுகாப்புக் குழுவுக்கு பட்டியலை அளிக்கவில்லை.
சதுப்பு நிலங்களிலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்தும் ஏராளமான கட்டிடங்கள் கட்டப் பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையில் இதுபோன்ற கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன. சிஎம்டிஏ உள்ளிட்ட துறைகளின் அரசு அதிகாரிகள் விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்து வருகின்றனர். இதற்கு மவுலிவாக்கம் விபத்து ஒரு உதாரணம்.
இதுபோன்று சதுப்பு நிலங்களில் எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்ற பட்டியலை மாநில அரசுகள் கணக்கெடுத்து சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் சதுப்பு நிலம், நீர்நிலைகளை ஒட்டியுள்ள இடங்களில் எத்தனை கட்டிடங்கள் உள்ளன என்று கண்டறிந்து அவை மக்கள் வசிக்க தகுதியற்றவை என்று அறிவிக்க வேண்டும். மூன்று மாடிகளுக்கு அதிகமாக உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.