கோவை நஞ்சுண்டாபுரத்தில் யானைகள் நடமாடும் பகுதியில் குடி மகன்களை குஷிப்படுத்த டாஸ்மாக் திறக்க முடிவு

கோவை துடியலூரை அடுத்த 22.நஞ்சுண்டாபுரத்தில் யானைகள் நடமாடும் பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் மதுபான கடை.
கோவை துடியலூரை அடுத்த 22.நஞ்சுண்டாபுரத்தில் யானைகள் நடமாடும் பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் மதுபான கடை.
Updated on
1 min read

கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி யானைகள் நுழைவதும், அவ்வப்போது யானை தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், யானைகள் நடமாடும் எண்.22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, வரப்பாளையம் சாலை, ஸ்ரீநகர் பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபான கடையைத் திறக்க மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. வன எல்லையில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரமே உள்ள இந்த இடத்தில் மதுபான கடையை திறந்தால், குடிமகன்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, "மதுபான கடை அமைய உள்ள இடத்துக்கு அருகிலேயே ஒரு தனியார் பள்ளி, மகளிர் கல்லூரி ஆகியவை உள்ளன. அந்த இடத்தை கடந்து சென்றால்தான் மகளிர் கல்லூரியை அடைய முடியும். இங்கு, மதுக்கடை திறக்கப்பட்டால் அவ்வழியாக கல்லூரிக்கு இருசக்கர வாகனங்களில் சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.

கடை அமைய உள்ள இடத்துக்கு பின்புறத்திலேயே குடியிருப்பு பகுதியும் உள்ளது. மேலும், யானைகள் நடமாடும் இடம் என்பதால் மதுகுடித்து விட்டு இரவில் நடந்து செல்வோர் யானை தாக்கி உயிரிழக்கவும், மதுபாட்டில்களை தூக்கி எறிந்துவிட்டு சென்றால், அவை உடைந்து யானைகளின் கால்களை பதம்பார்க்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இங்கு டாஸ்மாக் மதுபான கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்," என்றனர்.

உயிரிழப்பு ஏற்படலாம்: உடைந்த கண்ணாடி பாட்டிலால் யானைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வன கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, “யானையின் பாதத்தின் அடிப்பகுதி அட்டை போன்று சற்று கடினமாக இருக்கும். அதற்கு உள்பகுதியில் பஞ்சு போன்ற திசுக்கள் இருக்கும். யானைகள் உணவுக்காகவும், குடிநீருக்காவும் சில கி.மீ. தினமும் பயணிக்கும். அவ்வாறு நடக்கும்போது டன் கணக்கிலான எடையை ஒவ்வொரு பாதத்திலும் தாங்கி நடக்கிறது.

வன எல்லைக்கு வெளிப்பகுதியில் பொதுவாக யானை கவனமாகவே நடந்து செல்லும். ஆனால், அவற்றை விரட்டும்போதும், தொந்தரவு செய்யும்போதும், மிரண்டு ஓடும்போதும் யானையால் கவனமாக செல்ல இயலாது. அப்போது உடைந்த கண்ணாடி பாட்டில் போன்ற பொருள் எதிர்பாராதவிதமாக யானையின் பாதத்தில் குத்தி உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. அவ்வாறு நுழைந்தால் பாதத்தில் சீழ் பிடிக்கும். பின்னர், யானை தனது இயல்பான நடையை இழக்கும். உணவு உட்கொள்வது குறைந்து, ஒருகட்டத்தில் யானை உயிரிழக்கலாம்” என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் கேட்டதற்கு, “இதுதொடர்பாக விசாரித்து நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “அங்கு மதுபான கடையை திறக்கலாமா என்பது குறித்து போலீஸாரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அதன்பிறகே திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். வனத்துறையினர் கூறும்போது, “இதுதொடர்பாக ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in