

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அதிமுக சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, இரு தரப்பினரும் பிரிந்து செயல்பட்டனர். அப்போது, ஓபிஎஸ் உள்ளிட்டோரை பழனிசாமி தரப்பினர் கட்சியை விட்டு நீக்கினர். பதிலுக்கு ஒபிஎஸ்சும் கட்சியை பழனிசாமி உள்ளிட்டோரை நீக்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து, மக்களவை எம்பியாக உள்ள ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது என மக்களவை தலைவரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்த சூழலில், பழனிசாமிதரப்பினர் நடத்திய பொதுக்குழுவை நீதிமன்றம் அங்கீகரித்து, அவர் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, மீண்டும் நேற்று அதிமுக எமபி., சி.வி.சண்முகம், மக்களவை தலைவர் ஓம்பிர்லாவை சந்தித்து அதிமுக எம்பியாக ஓ.பி.ரவீந்திரநாத்தை அங்கீகரிக்கக் கூடாது என்று மனு அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது: அதிமுகவின் அடிப்படைஉறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட்டவுடனேயே நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினராக ஓ.பி.ரவீந்திரநாத் செயல்படக் கூடாதுஎன சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம்.
இதற்கிடையே சில வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமும், அதில் இயற்றப்பட்டதீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.
தீர்மானங்களில், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்டது செல்லும் என்பதும், அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பதும் அடங்கியிருக்கிறது. இந்த தீர்ப்புகளின் மீது எந்த விததடையாணையும் பெறப்படவில்லை.
அதே போல், அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரிப்பதாக தேர்தல்ஆணையமும் தெரிவித்துள்ளது. இவற்றின் அடிப்படையில் ரவீந்திரநாத்தை அதிமுகவின் உறுப்பினராக கருதக்கூடாது என வலியுறுத்தி, நாடாளுமன்ற சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை பரிசீலித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்துள்ளார்.ஜெயலலிதாவால் பன்னீர்செல்வம் உருவாக்கப்படவில்லை. அவர் ஜெயலலிதாவின் விசுவாசி கிடையாது. அவர் எந்த காலத்திலும் அதிமுகவின் விசுவாசியாக இருந்ததில்லை. கட்சி, குடும்பம் என யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என்பதால் குற்றம்சாட்டியவர்களுடன் சேர்ந்துள்ளார். திமுகவின் ஏஜெண்டாக அவர் செயல்படுகிறார்.
திமுகவின் அடிமட்ட தொண்டன் அவர். அவர்சபரீசனை சந்தித்து பேசியதற்கான காரணம் என்ன. பன்னீர்செல்வத்தை ஏவிவிட்டு அதிமுகவை பலவீனப்படுத்துவது தான் திமுகவின் நோக்கம். திமுகவுக்கு அவர் விலை போயிருக்கிறார். அதிமுகவின் பெயரையையோ, கொடியையோ யாரும் பயன்படுத்துவதற்கு உரிமை இல்லை. அதற்கான தொடர் நடவடிககை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.