சிலிண்டர் விநியோக காலதாமதம் சில நாட்களில் சரியாகும்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்
சென்னை: சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தைக் குறைக்க வெளிமாநிலங்களில் இருந்து தினமும் கூடுதல் சிலிண்டர்கள் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதால் நிலைமை சில நாட்களுக்குள் சரியாகிவிடும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்புஏற்பட்டுள்ளதாக `இந்து தமிழ் திசை' உள்ளிட்ட சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அளித்துள்ள விளக்கம்:
முன்பதிவு செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு விநியோகம் செய்வதற்கு தமிழகம் முழுவதும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த காலதாமதத்தை 2 நாட்களுக்குள் குறைக்கும் வகையில், இந்தியன் ஆயில் நிறுவனம் செங்கல்பட்டு, சேலம், திருச்சி, மயிலாடுதுறை, மன்னார்குடி மற்றும் ஈரோடுஆகிய பாட்லிங் ஆலைகளில் இருந்து தினசரி 124 லோடு கூடுதல்சிலிண்டர்கள் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
அத்துடன், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினசரி 100 லோடு கூடுதல் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு சென்னையின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சென்னை நகரை பொறுத்த வரை தினசரி 40முதல் 45 ஆயிரம் சிலிண்டர்கள்வரை பயன்படுத்தப்படுகிறது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் மூலம், தினசரி 1.25 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. எனவே, சிலிண்டர் விநியோகத்தில் உள்ள காலதாமதம் ஓரிரு நாட்களில் சரியாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
