

சென்னை: விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சாலை விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனஓட்டிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, சம்பந்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது.
அபராதம் செலுத்த தவறினால் அந்த வாகனம் ஏலம் விடப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, சீட்பெல்ட் அணியாமல் காரை இயக்குவது, வாகன ரேஸில் ஈடுபடுவது, வீலிங் செய்வது, பழுதடைந்த நம்பர் பிளேட் வாகனத்தில் பொருத்தி இருப்பது உட்பட அனைத்துவகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கும் உயர்த்தப்பட்ட அபராதத் தொகை விதித்து வசூலிக்கப்படுகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தி வருவதால் விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கும் வகையில் மேற்கொள்ள உள்ள தொலை நோக்கு திட்டங்கள், தற்போது நடைமுறைப்படுத்தி வரும் உயர்த்தப்பட்ட அபராதத் தொகை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சென்னைகாவல் ஆணையர் சங்கர் ஜிவால் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார், அப்பிரிவு இணைஆணையர் மயில்வாகனன் ஆகியோரை நேற்று தனது அறைக்கு அழைத்து நீண்ட நேரம் ஆலோசித்தார்.
முடிவில் அபராதம் விதிப்பதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் காட்டாமல் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாரை சாலை சந்திப்புகளில் நிறுத்த வேண்டும், பீக் அவர் எனப்படும் காலை,மாலை நேரங்களில் வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்யக் கூடாது, கண்காணிப்பு கேமரா உட்பட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விதிமீறல்வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்துஅதை வசூலிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு ஆலோசனைகளை போக்குவரத்து போலீஸாருக்கு காவல் ஆணையர் வழங்கியுள்ளார்.