

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.செந்தில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலம் கொல்லம் மாவடத்தில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர், அவருக்கு சிகிச்சையளித்த பெண் பயிற்சி மருத்துவரை போலீஸார் முன்னிலையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
மிகக் கொடூரமான இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் மீதும், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவர் அனுபவமில்லாதவர் என்றும், கொலையாளி தாக்கும்போது அவர் அச்சத்தால் கீழே விழுந்துவிட்டார் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகண்டிக்கத்தக்கது. உரிய உதவியும், பாதுகாப்பும் இன்றிஉயிரிழந்த அந்த மருத்துவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.