Published : 11 May 2023 06:18 AM
Last Updated : 11 May 2023 06:18 AM
சென்னை: சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை எட்வர்ட் பார்க் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). இவர் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்த இவர், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2018-ல் இவர் மீது ஓட்டேரியை சேர்ந்த இளம்பெண், புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில், மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடிவந்தனர். தலைமறைவாக இருந்தசதீஷ்குமாரை போலீஸார் கடந்த9-ம் தேதி கைது செய்து அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இளைஞர் சதீஷ்குமாரின் மனைவியும், தமிழக அமைச்சர் ஒருவரின் மகளுமான ஜெயகல்யாணி, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூண்டுதலின் பேரில்... நானும், சதீஷ்குமாரும் கடந்த 2016 முதல் காதலித்தோம். என் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்தோம். அதன்பிறகு, போலீஸார் தொடர்ச்சியாக எங்களை பின்தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். இதனால், பல மாநிலங்களுக்கு ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டது.
தன் மீது சிறு சிறு வழக்குகள் இருப்பதாக என் கணவரே கூறியுள்ளார். சிலரது தூண்டுதலின் பேரில் அவர் மீது ஏராளமான பொய் வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். தற்போதும் பொய் புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எங்களது 3 மாதக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், பூந்தமல்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, மருத்துவமனையிலேயே என் கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சிலரது தூண்டுதலால் போலீஸார் அத்துமீறுவது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவற்றை வழங்க உள்ளேன். என்கணவரை சிறையில் கொடுமைப்படுத்தி, என்னை பார்க்க விடாமல் செய்தால், ‘என் தந்தையும், காவல் துறையுமே இதற்கு காரணம்’ என்று எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT