

ராமேசுவரம்: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர புயல் சின்னம் காரணமாக, தமிழக துறைமுகங் களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் ஆழ்கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அந்தமான் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ. தென்மேற்கே நேற்று நிலை கொண்டிருந்தது.
இது புயலாக வலுப்பெற்று மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) நிலவக்கூடும்.
இந்த புயல் வடக்கு- வடகிழக்குத் திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் அருகே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 கி.மீ. முதல் அதிகபட்சமாக 130 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழக துறைமுகங்களில் பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல், தென் மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், வட கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புயல் கரையை கடக்கும் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், வங்கக்கடலில் ஆழ்கடல் பகுதியில் கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.