

மதுரை: நெல்லை மாவட்டத்தில் கோயில் திருப்பணி நிதியில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லையில் கோயில் திருப்பணி பெயரில் முறைகேடு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாபநாசம் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் 2014-ல் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நெல்லை மாவட்டம் ஸ்ரீநாடுகண்ட விநாயகர் கோயில், வாழுகந்த அம்மன் கோயில், உச்சினிமாகாளி அம்மன் கோயில், சங்கிலி பூதத்தார் கோயில் திருப்பணி குழுவினர் கோயில் பணத்தில் ரூ.13 லட்சத்துக்கும் மேல் முறைகேடு செய்திருப்பதாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக அறநிலையத் துறை மண்டல தணிக்கை அலு வலர் ஆய்வு செய்து, இந்தக் கோயில்களில் ரூ.13 லட்சத்து 43 ஆயிரத்து 576 முறைகேடு செய்திருப்பதாகவும், கோயில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், தணிக்கை அறிக்கையின் அடிப் படையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முறைகேட்டில் தொடர்பு டையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அறங்காவலர்கள் தற்போது இல்லை. கோயில்களில் கும்பாபிஷேகம் தொடர்பான ஆவணங்களும் இல்லை. இருப்பினும் நோட்டீஸ் அனுப்பப் பட்டு விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, அறநிலையத் துறை அதிகாரிகளின் அறிக்கை ஏற்புடையதாக இல்லை. 2008-ல் அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில் நிர்வாகம் தொடர்பாக தணிக்கை நடத்தி கும்பாபிஷேக ரசீதுகள், ஆவணங்கள் முறையாக பின்பற்றப் படவில்லை. இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
சம்பந்தப்பட்ட அறங்காவலர் களை அதிகாரிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்கும் முயற்சியாகும். இந்த மனு 2014-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த முறைகேட்டில் கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 2=ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.