மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

அமைச்சர் செந்தில்பாலாஜி | கோப்புப்படம்
அமைச்சர் செந்தில்பாலாஜி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க மின்வாரிய ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 1.12.2019 நாளன்று பெறுகின்ற ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு, நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதேபோல, 1.12.2019ம் நாளன்று, பத்து வருடங்கள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் பணிப்பலனாக 1.12.2019 நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். இது நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 527 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இவ்வூதிய உயர்வின் மூலம் ஏற்படும் நிலுவைத்தொகை, 2019ம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 31.3.2022 வரை,மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் இரண்டு தவணைகளாகவும், 1.4.2022 முதல் 31.5.2023 வரை வழங்க வேண்டிய நிலுவைத்தொகை இரண்டு தவணைகளாக வழங்கவும் முடிவு செய்ததை, நிர்வாகமும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனால், கூடுதலாக ரூ.623 கோடி வாரியத்திற்கு செலவுகள் ஏற்படும். இந்த ஊதிய உயர்வு மூலம் பயன்பெறக்கூடிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை 75,978. 10 வருடங்கள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிப்பலனாக 3 சதவீதம் பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை, 62,548. தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in