தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல்: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல்: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

Published on

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து, இன்று புயலாக மாறவுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை 2-4 டிகிரிவரை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது, நேற்று காலை 5.30 மணிநிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலை கொண்டிருந்தது. மேலும், இது நேற்று மாலை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மே 10-ம் தேதிமாறவுள்ளது. இந்த புயலுக்குமொக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 11-ம் தேதி நிலவக்கூடும். அதன்பிறகு, வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

அதேநேரம், தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 10-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடல் பகுதியில் புயல் உருவாகவுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் வெப்பம் அதிகரித்து காணப்படும். அதன்படி, வெப்பநிலை அடுத்த 3 நாள்களுக்கு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in