மணிப்பூரில் தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - தமிழக அரசு நடவடிக்கை

மணிப்பூரில் தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - தமிழக அரசு நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: மணிப்பூரில் மோரே பகுதியில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் திரும்ப விரும்பிய 5 மாணவர்களுக்கு விமான டிக்கெட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல்வர் அறிவுறுத்தல்: மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், அங்குவசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில், பொது மற்றும்மறுவாழ்வுத் துறை அலுவலர்களை இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர்மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள் ளார்.

இதற்கிணங்க, மணிப்பூர் மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் உடனடியாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதித்து அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு உள்ளிட்ட அனைத்துஉதவிகளும் தமிழக அரசால், அம்மாநில அரசு மற்றும் மணிப்பூர் தமிழ்ச் சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. மருத்துவம் பயிலும் மாணவர்கள் தங்கள் கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும் கல்லூரி தேர்வுகளுக்கு தயாராகி வருவதாலும் தற்சமயம் தமிழகத்துக்கு திரும்பிவர விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

5 மாணவர்களுக்கு பயணச்சீட்டு: அதேநேரம் தமிழகத்துக்கு திரும்பிவர விருப்பம் தெரிவித்துள்ள, விருதுநகர், தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 மாணவர்களை அழைத்துவர அயலக தமிழர் நலத்துறைமூலம் விமானப் பயணச்சீட்டுஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சென்னை விமான நிலையம் வந்ததும், அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுசேர அனைத்து ஏற்பாடுகளும் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோன்று மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் மோரே தமிழ் மக்களுடனும் தொடர்பு கொள்ளப்பட்டு அவர்கள் பாதுகாப்புக்கும் தமிழக அரசால் மணிப்பூர் அரசு மற்றும் தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in