Published : 10 May 2023 06:22 AM
Last Updated : 10 May 2023 06:22 AM
கோவை: கோவை - துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படாததற்கு இருக்கைகள் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரிக்காததே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கு மட்டுமே நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது.
துபாய் விமான நிலையத்தில் இருந்து பல நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுவதால் கோவையில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு செல்லும் பயணிகள் துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவில்லை.
இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் இருந்து துபாய்க்கு வாரந்தோறும் 65 ஆயிரம் வீதம் 1,30,000 இருக்கைகள் (வருகை, புறப்பாடு சேர்த்து) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கேற்ப அதிக வரவேற்பு உள்ள விமான நிலையங்களில் இருந்து துபாய்க்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை-துபாய் இடையே விமான சேவை தொடங்க (பைலேட்ரல் ஒப்பந்தம்) கடந்த 2006-2008-ம் ஆண்டு காலகட்டத்தில் கையெழுத்தாகியுள்ளது. கோவையில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, இலங்கை மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கலாம்.
கோவை-துபாய் இடையே விமான சேவை தொடங்க தொழில் அமைப்பு நிர்வாகிகள் முதலில் விமான சேவை தொடங்கினால் லாபகரமாக இயக்கலாம் என்பதை அந்நாட்டு விமான நிறுவனத்துக்கு புரிய வைக்க வேண்டும். மறுபுறம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வேறு விமான நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துபாய் நாட்டுக்கான இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்து கோவைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இல்லையெனில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வாரந்தோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது மட்டுமே கோவை -துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும், என்றனர்.
கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) இயக்குநர் நந்தகுமார் கூறியதாவது: எங்கள் அமைப்பு சார்பில் ஏற்கெனவே ‘எமிரேட்ஸ்’ நிறுவனத்தின் ஓர் அங்கமான ‘பிளை துபாய்’ நிறுவனத்துடன் பேச்சு நடத்தியுள்ளோம். இந்திய அரசு துபாய்க்கு ஒதுக்கீடு செய்துள்ள வாராந்திர இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே கோவை - துபாய் இடையே விமான சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
கோவை மற்றும் அதைச்சுற்றியுள்ள 7 மாவட்டங்களை சேர்ந்த பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, துபாய்க்கு ஒதுக்கீடு செய்துள்ள இருக்கைகள் எண்ணிக்கையை உயர்த்தவும், கோவை -துபாய் இடையே விமான சேவை தொடங்க பரிந்துரைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT