Published : 10 May 2023 06:06 AM
Last Updated : 10 May 2023 06:06 AM

திருத்தணி | கல்குவாரி குட்டையில் மூழ்கி மூதாட்டி, 2 சிறுமிகள் பரிதாப உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

உயிரிழந்த மல்லிகா, கோமதி, ஹேமலதா.

திருவள்ளூர்: திருத்தணியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மூதாட்டி, இரு பள்ளி சிறுமிகள் என 3 பேர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கமுதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகரை சேர்ந்தவர்பாபு (60). இவர் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதிஉயிரிழந்தார். இந்நிலையில் பாபுவின் 30-ம் நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உறவினர்களான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தைவாசல் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி மல்லிகா (65), மாரிமுத்து மகள் கோமதி (14) மற்றும் விநாயகம் மகள் ஹேமலதா (16) ஆகியோர் நேற்று திருத்தணிக்கு வந்தனர். கோமதி 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஹேமலதா 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், மல்லிகா, கோமதி, ஹேமலதா மூவரும் நேற்றுதிருத்தணி பெரியார் நகர் பகுதியில்உள்ள சுமார் 50 அடி ஆழமுள்ள கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது கோமதி, ஹேமலதா ஆகிய இருவரும் கல்குவாரி குட்டையின் ஆழமான பகுதிக்குச் சென்றதால், அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகா, சிறுமிகள் இருவரையும் காப்பாற்ற முயன்றார். இருப்பினும் அவரும் நீரில் மூழ்கினார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் உள்ள திருத்தணிநகராட்சி உரக்கிடங்கில் பணியாற்றிவரும் மணிகண்டன் உள்ளிட்டவர்கள் கல்குவாரி குட்டையில் குதித்து3 பேரையும் மீட்க முயன்றனர். இதில், மல்லிகா சடலமாக மீட்கப்பட்டார். சிறுமிகள் மாயமாகினர்.

தகவலறிந்த திருத்தணி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி, இரு சிறுமிகளையும் சடலமாக மீட்டனர். திருத்தணி போலீஸார் சடலங்களை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திருத்தணி பெரியார் நகர் பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கல்குவாரி குட்டைகள் உள்ளன. இக்குட்டைகளில் தேங்கியுள்ள நீரில் பலர் துணி துவைப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தற்போது நடந்துள்ள 3 பேர் உயிரிழப்பு சம்பவம் போல், பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்த கல்குவாரிகளை சுற்றி பாதுகாப்பு வேலிகளைஅமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே 3 பேர் உயிரிழப்புசம்பவத்தில் ஆழ்ந்த இரங்கலும்வருத்தமும் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x