Published : 10 May 2023 06:15 AM
Last Updated : 10 May 2023 06:15 AM
திருவள்ளூர்: மீஞ்சூரில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் தெய்த துப்புரவு பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய தூய்மை பணி ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
மீஞ்சூர் தனியார் பள்ளியில் கடந்த 1-ம் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மீஞ்சூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர் கோவிந்தனும் தற்காலிக பணியாளரான சுப்புராயலுவும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதுதொடர்பாக பள்ளியின் தாளாளரை மீஞ்சூர் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று தனியார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ சார்பில்,மீஞ்சூரில் விஷவாயு தாக்கிஉயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதியாக ரூ.17 லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பிறகு, செய்தியாளர்களிடம் வெங்கடேசன் தெரிவித்ததாவது: இந்தியாவில், விஷவாயு தாக்கிஉயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பது மிகவும் வருந்ததக்கது. விஷவாயு தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த மாவட்டநிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்களை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் அதிக கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, செங்குன்றம் காவல் துணை ஆனணயர் மணிவண்ணன், உதவிஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மாஹின் அபுபக்கர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, தாட்கோ மாவட்ட மேலாளர் இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT