

சென்னை: மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்காமல், அவர்களை போலி பட்டதாரிகளாக திமுக அரசு உருவாக்குகிறது என பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (இன்று) வேதியியல் செய்முறை தேர்வு நடைபெறுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த கல்லூரியில் பரிசோதனை கூடங்களே இல்லை என்பதே அதிர்ச்சியான உண்மை.
மாணவர்களுக்கு பரிசோதனை பயிற்சியே கொடுக்காமல் அவர்கள் செய்முறை தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள். அந்த கல்லூரி செயல்படும் இடத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக வாடகை கூட கொடுக்க முடியாத அரசு, செய்முறை தேர்வை நடத்துவதாக அறிவித்திருக்கிறது.
முறையான கல்லூரியை மாணவர்களுக்கு உருவாக்கி கொடுத்து, உரிய பயிற்சியை கொடுத்து, திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் முயற்சியை எடுக்காமல், உண்மையான மாணவர்களை போலி பட்டதாரிகளாக உருவாக்குவது கண்டிக்கத்தக்கது. மாணவர்களை அவலத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் முயற்சியே இது.
2 ஆண்டு ஆட்சி குறித்து தற்புகழ்ச்சி செய்து கொண்டு பெருமிதம் கொள்ளும் திமுக அரசு, வருங்கால சமுதாயத்தை சீர்கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது கடும் கண்டனத்துக்குரியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.