Published : 10 May 2023 06:25 AM
Last Updated : 10 May 2023 06:25 AM

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்: செறிவூட்டப்பட்ட ஆவின் பசும் பால் அறிமுகம்

சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில், செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பால், உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும். இதன் அரை லிட்டர் விலை ரூ.22 ஆகும்.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் சார்பில் 27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புற பால் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்து, ஒன்றியங்கள் மற்றும் இணைய பால் பண்ணைகளில் பதப்படுத்தி, தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டில் தினசரி 27 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆவின் சார்பில் செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பால் அரை லிட்டர் விலை ரூ.22 ஆகும்.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தை பெற்றுத் தருவதில் வைட்டமின்-டி பங்களிப்பதனால், பாலில் வைட்டமின்-டி செறிவூட்டுவது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் வைட்டமின்-ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பால் அறிமுகப்படுத்தப்படும் எனச் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி செறிவூட்டப்பட்ட பசும்பால் (பர்ப்பிள் நிற பால் பாக்கெட்) செவ்வாய்க்கிழமை (மே 9) முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பாலை வாடிக்கையாளர்கள் வாங்கிப் பயன்படுத்துவதால், உடலுக்குத் தேவையான வைட்டமின்-ஏ மற்றும் டி கிடைக்கப்பெறும்.

செறிவூட்டப்பட்ட இந்த பசும்பால், உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதிலும், பார்வையை மேம்படுத்துவதிலும் எலும்புகளை உறுதிப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய வடிவமைப்பில் ஆவின் பால் பாக்கெட்டுகள்: ஆவின் நிறுவனத்தின் சார்பில், அனைத்து பால் வகைகளும் நுகர்வோரின் தேவைக்கேற்ப புதிய வடிவமைப்பில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

.அனைத்து மாவட்டங்களிலும் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) மெஜந்தா நிறத்திலும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) நீல நிறத்திலும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardised Milk) பச்சை நிறத்திலும், கொழுப்புச் சத்து நிறைந்த பால் (Full Cream Milk) ஆரஞ்சு நிறத்திலும், டீ மேட் - கொழுப்புச் சத்து நிறைந்த பால் (Full Cream Milk) (சிவப்பு) நிறத்திலும், பசும்பால் பர்ப்பில் நிறத்திலும், ஆவின் கோல்ட் பால் மஞ்சள் நிறத்திலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஆவின் நிறுவனம் வளர்ந்து வரும் சந்தைக்கு ஏற்ப பால் பாக்கெட்டுகளின் வடிவமைப்பை மாற்றியமைத்து, அதே வண்ண பாக்கெட்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x