

சென்னை: தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை சென்னை, நந்தனத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ஆலை உரிமையாளர்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் எம்.சண்முகம் எம்.பி. (தொமுச பேரவை), ஆர்.கமலக்கண்ணன், கோ.சூரியமூர்த்தி, சர்க்கரை பிரிவு தலைவர் திருப்பதி (அண்ணா தொழிற்சங்கம்) உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-ம் ஆண்டு அக்.1 முதல் கடந்த ஆண்டு செப்.30-ம் தேதி வரையிலான காலத்தில் பேச்சுவார்த்தை நடைபெறாததால் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இந்த 4 ஆண்டு காலத்துக்கு ஊதிய உயர்வு இல்லாததை ஈடு செய்யும் வகையில் தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு ரூ.2,500 முதல் ரூ.2,700 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். 30 ஆண்டுகள் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.2,900 முதல் அதிகபட்சம் ரூ.3,500 வரை கிடைக்கும்.
இந்த ஒப்பந்தத்தின்படி 9 தனியார் ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதில் உடன்பாடு இல்லாததால், பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் சிஐடியு சங்க நிர்வாகிகள் புறக்கணித்தனர்.