

தமிழக அரசு நடத்தி வரும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளை ரூ.150 கோடியில் நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் இலவச வேட்டி-சேலை கள் மற்றும் பள்ளிச் சீருடைக்குத் தேவைப்படும் நூலை இனி அரசு ஆலைகளே உற்பத்தி செய்ய முடியும்.
3.4 கோடி வேட்டி-சேலை
தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகைக் காலங்களில் மாநில அரசால் இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 170 லட்சம் சேலைகளும், 170 லட்சம் வேட்டிகளும், அரசுப் பள்ளிகளில் பயிலும் 50 லட்சம் மாணவ-மாணவியருக்கு நான்கு இணை பள்ளிச் சீருடைகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு சார்பில் கூட்டுறவு நூற்பாலைகள் இயங்கி வந்த போதிலும், அவற்றில் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது.
அதனால், நூல் உற்பத்திக்காக தனியார் நூற்பாலைகளை அரசு நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதில், சில நேரங்களில் தேவை யற்ற தாமதங்களும், டெண்டர் நடைமுறைகளில் சில முறைகேடு கள் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. கடந்த ஆண்டு கூட பொங்கலின்போது தரப்படவேண்டிய இலவச வேட்டி-சேலைகள் மே மாதம்தான் கொடுத்து முடிக்கப்பட்டன.
டிசம்பர் முதல்
இதுபோன்ற பல பிரச்சினை களைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகளின் தரத்தினை உயர்த்த தமிழக அரசு முடிவெடுத் துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு தேவையான இலவச வேட்டி-சேலைகள் மற்றும் பள்ளிச்சீருடைகள் தயாரிப்பதில் மாநில அரசு தன்னிறைவு பெறும் நோக்கில், அனைத்து கூட்டுறவு நூற்பாலைகளையும் நவீனப் படுத்த முதல்வர் உத்தரவிட்டுள் ளார்.
இதைத் தொடர்ந்து ரூ.150 கோடியில், தமிழகத்தில் உள்ள ஆறு அரசு கூட்டுறவு நூற்பாலை களை நவீனப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. அவற்றில், டிசம்பரிலேயே மொத்த திறனில் 50 சதவீத அளவுக்கு உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வட்டாரங்கள், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது: தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் புதுக்கோட்டை, ஆண்டிபட்டி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, அரூர் மற்றும் எட்டயபுரம் ஆகிய 6 இடங்களில் கூட்டுறவு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் உள்ள இயந்திரங்கள் மிகவும் பழைய தாகவும், தற்காலத்துக்கு ஏற்றதாக இல்லாமலும் உள்ளன. அதனாலேயே அரசுத் திட்டங்க ளுக்கான ஆடைகளுக்கான நூல் உற்பத்திக்கு தனியாரிடம் கொடுத்துவிட்டு காத்து நிற்க வேண்டியுள்ளது. நமக்குத் தேவையான 14 ஆயிரம் மெட்ரிக் டன் நூலில், 5 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் குறைவாகவே அரசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படு கிறது.
ஜெர்மனியில் இருந்து இறக்குமதி
இதனை கருத்தில் கொண்டு ஜெர்மனி நாட்டில் இருந்தும், இந்தியாவின் முன்னணி நிறுவனத் திடமிருந்தும் புதியகருவிகள் வாங்கும் பணிகள் தொடங்கியுள் ளன. அவற்றை நிறுவிய பிறகு, நூல் உற்பத்தி இரண்டரை மடங்குக்கு மேல் பெருகும்.
நமது தேவையை நிறைவு செய்வதில் 100 சதவீத தன்னிறைவை நாம் எட்டமுடியும். தனியாரை முழுவதும் நம்பி நிற்கத் தேவையில்லை. செலவும் குறைவு.
வரும் டிசம்பர் முதல் வேட்டி, சேலை, பள்ளிச் சீருடைகளுக்கான நூல் உற்பத்தி தொடங்கப்படும். பிப்ரவரியில் முழுத்திறனை நமது ஆலைகள் எட்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.