

நாமக்கல்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள தடுப்புச் சுவரின் உயரத்தை உயர்த்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண், பெண் என சரிபாதியாகப் பிரிந்து சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலுக்கு தினசரி தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில், மலை அடிவாரத்திலிருந்து பேருந்து இயக்கப்படுகிறது. மேலும், பிற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மலை மீது செல்ல வசதியாக அடிவாரத்திலிருந்து மலைக் கோயில் வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையோரம் தடுப்புச் சுவர் மற்றும் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மலை அடிவாரம் முதல் குறிப்பிட்ட தூரம் வரை தடுப்புச் சுவரின் உயரத்தை உயர்த்தும் வகையில் தடுப்புச் சுவரின் மேல்பகுதியில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
பிறபகுதியில் சாலை மட்டத்திலிருந்து உயரம் குறைந்த தடுப்புச் சுவர் மட்டுமே உள்ளது. இதனால், விபத்து அபாயம் உள்ளது. எனவே, மலைப்பாதை சாலை தடுப்புச் சுவரின் உயரத்தை உயர்த்த வேண்டும் அல்லது தடுப்புச் சுவர் மீது உயரமாகக் கம்பி தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.