Published : 10 May 2023 06:47 PM
Last Updated : 10 May 2023 06:47 PM
புதுக்கோட்டை: மக்காச்சோளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அமெரிக்கன் படைப்புழுவை சென்சார் பொருத்தி கட்டுப்படுத்துவது குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்காச்சோளத்தில் அதிகமான சேதத்தை ஏற்படுத்தக் கூடியது அமெரிக்கன் படைப்புழு. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பிஹார், மேற்கு வங்காளம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த பாதிப்பு உள்ளது.
மக்காச்சோளத்தில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கரும்பு, நெல், கோதுமை, ராகி உள்ளிட்ட பயிர்களையும் பாதிக்கிறது. இத்தகைய படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்காக அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நன்மை தரும் பூச்சிகளும் சேர்ந்து அழிக்கப்படுவதுடன், மண் வளமும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலான நோய்க் கட்டுப்பாட்டு முறைகளை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
அதில், இனக்கவர்ச்சி பொறியும் ஒன்று. இவற்றால் ஈர்க்கப்படும் புழுக்களை நேரில் சென்று பார்த்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு மாற்றாக மின்னணு உணர்திறன் கொண்ட சென்சார் இனக்கவர்ச்சி பொறி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கை தரவுகளை கணினி, செல்போன்கள் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்கலாம்.
இத்தகைய இனக்கவர்ச்சிப் பொறியானது முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நல்ல முன்னேற்றம் உள்ளதால், இதிலுள்ள குறைகள் சரி செய்யப்பட்டு, நேர்த்தியான இனக்கவர்ச்சி பொறி உருவாக்கப்பட உள்ளதாக வேளாண் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் கூறியது: இனக்கவர்ச்சி பொறியானது படைப்புழுவின் உற்பத்தி மற்றும் எண்ணிக்கையை முன்கூட்டியே அறிவதற்கும், சேதத்தை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள புதிய சென்சார் இனக்கவர்ச்சி பொறியின் தரவுகள் செயற்கைக்கோளுடன் இணைக்கப்படுவதால் உலகின் எந்த இடத்தில் இருந்தும் படைப்புழுவின் தாக்குதலுக்கான அறிகுறிகளை கண்காணிக்க முடியும்.
இந்த சென்சார் இனக்கவர்ச்சி பொறி மூலம் படைப்புழுக்கள் தாக்குதலுக்கான வாய்ப்பை முன்னரே தெரிந்து கட்டுப்பாட்டு முறைகளை சரியான நேரத்தில் மேற்கொள்ள முடியும்.
சென்சாரில் இருந்து தரவுகள் சரியாக வந்து கிடைக்கின்றன. இதிலுள்ள குறைகள் சரி செய்யப்பட்டு புதிய வகை சென்சார் இனக்கவர்ச்சி பொறி விரைவில் தயாரிக்கப்பட உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கன் படைப்புழு மட்டுமின்றி, விவசாயத்தில் உள்ள அனைத்து விதமான பூச்சி நோய் பாதிப்புகளையும் முன்னரே தெரிந்த கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இதுதொடர்பாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்புகளுடன் சேர்ந்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் இந்த ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
அறந்தாங்கி அருகே மறமடக்கியில் தொடங்கிய இந்த ஆராய்ச்சியானது தற்போது திருவரங்குளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகளும் அவ்வப்போது வந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT