Published : 10 May 2023 06:10 AM
Last Updated : 10 May 2023 06:10 AM

‘கரோனா பரவுவதால் வெளியில் வரமாட்டோம்’ - 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய குடும்பத்தினர்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் தாய் மற்றும் மகள்கள் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, “கரோனா பரவல் இன்னும் இருப்பதால் நாங்கள் வெளியில் வரமாட்டோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில் நேசமணி நகரைச் சேர்ந்தவர் பீனா(50). இவர் தனது 2 மகள்கள் மற்றும் உறவினருடன் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதாக சமூக நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சென்று விசாரித்தபோது தகவல் உண்மை எனத் தெரியவந்தது.

பக்கத்து வீட்டினர் அவ்வப்போது அழைத்தபோதும், வீட்டில் இருப்பவர்கள் பதில் தராமல் இருந்துள்ளனர். ஆன்லைன் டெலிவரி மூலம் வீட்டுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வரவழைத்து பயன்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் சென்று கதவைத் திறக்கும்படி கூறியும், அவர்கள் திறக்கவில்லை.

நேசமணிநகர் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்றனர். அப்போதும் உள்பகுதியில் உள்ள இரும்பு கிரில் கதவை பீனா அடைத்துக் கொண்டார். போலீஸார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளின் கேள்விக்கு, முன்னுக்கு பின் முரணாக பீனா பதில் தெரிவித்துள்ளார்.

‘நாகர்கோவில் மணிமேடை பகுதியில் சொந்தமாக கடைகள் உள்ளன. அவற்றை வாடகைக்கு விட்டுள்ளோம். ஒரு கடைக்காரர் கடையின் முன்பு கண்ணாடி வைத்துள்ளார்.

அந்த கண்ணாடியை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் வெளியே வந்தால் எங்களிடம் விசாரணை நடத்துவார்கள். மேலும், கரோனா பரவல் இன்னும் இருக்கிறது. எனவே நாங்கள் வெளியே வரமாட்டோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார். எழுத்துப் பூர்வமாகவும் எழுதிக் கொடுத்துள்ளார்.

அதிகாரிகள் கூறும்போது, “பீனாவின் வீட்டில் அவரது 2 மகள்கள் மற்றும் உறவினர் ஒருவர் என 4 பேர் உள்ளனர். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். வெளியாட்களுக்கு பயந்து வீட்டுக்குள் இருப்பதாக கூறினார்கள். பீனாவின் 2 மகள்களும் நன்கு படித்தவர்கள்.

அதேநேரம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்போல தெரிகிறார்கள். அவர்களுக்கு சொந்தமான கடைகள் உள்ளன. அந்த கடைகள் மூலம் மாதம்தோறும் வாடகைப் பணம் வருகிறது. அதை வைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x