யாமறியோம் பராபரமே - அமைச்சரவை மாற்றம் குறித்து துரைமுருகன் பதில் 

துரைமுருகன் | கோப்புப் படம்
துரைமுருகன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: "அமைச்சரவை மாற்றங்களைப் பற்றி யாமறியோம் பராபரமே" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. ( தமிழக அமைச்சரவை மாற்றம்? - ஆளுநரை சந்திக்கிறார் மூத்த அமைச்சர் துரைமுருகன் )

இது குறித்து, சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், "ஆளுநர் மாளிகைக்குச் சென்றால் சொல்லிவிட்டுத்தான் செல்வேன். அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்குத் தெரியாது. அமைச்சரவை மாற்றங்களை பற்றி யாமறியோம் பராபரமே.

தனக்குக்கீழே பணி செய்வோரை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிக்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அது நடக்குமா என்பது உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும். அமைச்சரவை மாற்றத்திற்கான தேவை இருக்கிறதா என முதல்வர் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த அமைச்சரும் தங்களது பொறுப்பு மாற்றப்படுமா என பதற்றத்தில் இல்லை. நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன். நான் துணை முதலமைச்சராக வந்தாலும் நல்லதுதான்.

இன்று தலைமைச் செயலகம் சென்றுவந்த பிறகு முதல்வரை சந்திக்க தொடர்பு கொண்டேன். ஆனால் முதல்வருக்கு கால் வலி என்பதால் ஓய்வு எடுப்பதாகக் கூறினர்.

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடந்தால் கலந்துகொள்வேன். நான் 2 நாட்ளாக சென்னையில் இல்லை. ஒருநாள் சென்னையில் இல்லாவிட்டாலும் பாதி உலகம் தெரியமால் போய்விடுகிறது. முதல்வருடன் நான் வெளிநாடு செல்லவில்லை." என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in