

புதுக்கோட்டை: புதிய மணல் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிக்காது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக, முதல் கட்டமாக 25 இடங்களில், மணல் குவாரிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அது குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் மெய்யநாதன் இவ்வாறாகக் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (மே 9) செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: "தமிழகத்தில் 25 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த இடத்திலும் சுற்றுச்சூழல் பாதிக்காது. மக்களின் தேவை அடிப்படையில் புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து மணல் குவாரிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால்தான் தென்பெண்ணை ஆறு மாசுபடுகிறது. இதைத் தடுப்பதற்காக பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு மூலம் கர்நாடக அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த ஆறு பாதுகாக்கப்படும்" என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.