

புதுச்சேரி: பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜிப்மரில் புதிதாக 786 பணியிடங்களுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் இன்று வெளியிட்ட அறிக்கை: "நடப்பு நிதியாண்டில் ஜிப்மருக்கு மத்திய அரசு ரூ. 1490.43 கோடி அளித்துள்ளது. இதன்மூலம், ஜிப்மருக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஐந்து ஆண்டுகளில் 53 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. புதுடெல்லி எய்ம்ஸை விட இது அதிகம். புதுச்சேரி ஜிப்மரில் நிதி பற்றாக்குறை இல்லை.
புற்று நோயாளிகள் காத்திருப்பு நேரத்தை குறைக்க லீனியர் ஆக்சிலரேட்டர் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. கருவின் வளர்ச்சி, குறைபாட்டை அறிய ஸ்கேனுக்காக மேம்பட்ட 4 டி அல்ட்ரா சவுண்ட் கருவி வந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய வார்டு திறக்கப்பட்டுள்ளது. காகித மருந்து சீட்டுகள் தவிர்க்கப்பட்டு மின் சீட்டு மட்டுமே தரப்பட்டு, நோயாளிகளுக்கு பிடிஎப் படிவத்தில் மருத்துவ சீட்டை பதிவிறக்க இணைப்புடன் கூடிய எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது.
புதிதாக 786 பணியிடங்களை மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்பு இருந்த பணியிடங்களை விட 17 சதவீதம் அதிகம். இந்த புதிய பணியிடங்களில் 252 மருத்துவர்கள் (பேராசிரியர்கள் அளவில் 82 பணியிடங்கள், முது நிலை மருத்துவர்கள் 70 பேர், இள நிலை மருத்துவர்கள் 100 பேர்), 431 செவிலியர்கள், 50க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் அடங்குவர். புதிய பணியிடங்களுக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
70 முதுநிலை மருத்துவர்கள், 550 செவிலியர்கள் ஆகியோர் அண்மையில் முந்தைய காலி பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரு மாதங்களில் பணிக்கு வருவார்கள். ஜிப்மரில் தற்போது சேவைகளுக்கான கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. வெளிப்புற நோயாளிகளுக்கு
இலவச மருந்துகள் தரப்படுகின்றன. மலிவான விலையில் மருந்துகளை தர மக்கள் மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காரைக்காலில் ஜிப்மர் வளாகம் கட்டப்பட்டு வருகிறது. மாணவர் விடுதி கட்டடங்கள் கட்டி பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கல்லூரி கட்டடம் முடிவடையும் நிலையிலுள்ளது. 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்ட திட்டங்கள் தயாராக உள்ளன. ஏனாமில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டி முடிக்கப்ட்டு இன்னும் சில மாதங்களில் செயல்பட தொடங்கும்." இவ்வாறு ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.