Published : 03 Sep 2017 09:35 AM
Last Updated : 03 Sep 2017 09:35 AM

சிவாஜிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழருவி மணியன் வேண்டுகோள்

நடிகர் சிவாஜிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்தார்.

ரவுத்திரம் வாசகர் வட்டம் சார்பில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் எழுதியுள்ள ‘திரையுலகின் தவப்புதல்வன்’, ‘இராமாயண ரகசியம்’ ஆகிய நூல்களின் அறிமுக விழா சென்னை தி.நகர் சர் பிட்டி. தியாகராயர் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ‘ரவுத்திரம்’ இதழின் பொறுப்பாசிரியர் குமரய்யா தலைமை தாங்கினார். விழாவில் தமிழருவி மணியன் ஏற்புரையாற்றி பேசியதாவது:

சிவாஜியின் படங்கள் குடும்ப உறவுகளை பிரதிபலிப்பவை. தந்தை பெரியார் சினிமாவை அடியோடு வெறுக்கக்கூடியவர். தமிழ் மண்ணில் இருந்து சினிமாவை விரட்ட வேண்டும் என்ற சொன்னவர். அப்படிப்பட்டவர் சிவாஜியின் நடிப்பைப் பாராட்டினார். கணேசனை சிவாஜி ஆக்கியது பெரியார்தான். சிவாஜி நடித்த மிருதங்க சக்கரவர்த்தி படத்தை பார்த்துவிட்டு, நடிகர் என்றால் அது சிவாஜி மட்டும்தான் என்று பாராட்டியவர் எம்ஜிஆர்.

தனது திரைப்படங்கள் மூலம் தேசப்பற்றை பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய் சேர்த்தவர் சிவாஜி. தனது அழகிய தமிழ் உச்சரிப்பால், தனக்கு தெரியாமலேயே தமிழ்ப்பணி ஆற்றினார். சிவாஜிக்கு மத்திய அரசு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை. சிவாஜியை மத்திய அரசு புறக்கணித்தது. எம்எஸ் சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லாகான், பீம்சிங் சேத்தி, ரவிசங்கர், சத்தியஜித்ரே, டெண்டுல்கர் போன்றவர்களுக்கு எல்லாம் மத்திய அரசு பாரத ரத்னா வழங்கி கவுரவித்தது. இவர்களைவிட சிவாஜி எந்த வகையில் குறைந்தவர் என்பதை மத்திய அரசு சொல்ல முடியுமா? சிவாஜிக்கு அதிகபட்ச அங்கீகாரமாக ராஜ்யசபா எம்பி பதவி மட்டுமே அளிக்கப்பட்டது. மத்திய அரசு சிவாஜிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்.

இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘‘தமிழ் சினிமாவுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் தமிழருவி மணியன் வழங்கியுள்ள கொடைதான் இந்த நூல்கள். நடிப்பின் உச்சம் தொட்டவர் சிவாஜி. அவரைப் போல நடிக்க இனிமேல் யாரும் பிறக்க மாட்டார்கள்’’என்றார்.

ராமாயணம், கம்பராமாயணம் இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வுரை ஆற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘‘ராமாயணத்தில் ராவணன் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் தம்பிமார் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீண் போகாது. இலங்கையில் தமிழ் ஈழம் மலரும்’’என்றார்.

விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x