அனைத்து மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

அனைத்து மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அனைத்து இடங்களுக்கும் மத்திய அரசே மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைகள், மாநில அளவில் நடத்தப்படுவதுதான் சிக்கல் இல்லாமல் இருக்கும் நடைமுறையாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வகையான இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

மத்திய அரசு நடத்தும் மாணவர் சேர்க்கையிலும் அதேஇடஓதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படும் என்றாலும்கூட, 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அந்தந்த மாநிலத்தின் இடஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடித்து மத்திய அரசே கலந்தாய்வை நடத்துவதுசாத்தியமல்ல. குறிப்பாக, தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு மட்டுமின்றி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு என ஏராளமான இடஒதுக்கீடுகள் உள்ளன. தமிழகத்தின் சமூக, கல்விச் சூழலை நன்றாகப் புரிந்தவர்களால் மட்டும்தான் இவற்றைச் செயல்படுத்த முடியும்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் உரிமையையும் மத்திய அரசு பறித்துக் கொண்டால், இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவின் எந்த மாநிலங்களைச் சேர்ந்தமாணவர்களும் சேரலாம். அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மத்திய அரசின் இடஒதுக்கீடு முறையே கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இது தமிழகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒருபுறம் கூட்டாட்சி தத்துவம் பேசிக்கொண்டு, படிப்படியாக மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது நியாயமற்றது. எனவே, அனைத்து மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in