Published : 09 May 2023 07:00 AM
Last Updated : 09 May 2023 07:00 AM
சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது பாதை உள்ளிட்ட 5 ரயில் பாதை திட்டங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த, ரூ.11.52 கோடி நிதியை ரயில்வே வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ரயில் பாதைகள் விரிவாக்கம் தொடர்பானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக, முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவைகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும், பயணிகளுக்குத் தேவையான வசதிகள் தொடர்பாக எம்.பி.க்கள், சமூக ஆர்வலர்கள், ரயில்பயணிகள் கொடுக்கும் கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ரயில் பாதை திட்டங்களைதேர்வு செய்து, ரயில்வே வாரியத்துக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்நிலையில், தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது பாதை உள்ளிட்ட 5 ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ள ரயில்வே வாரியம் ரூ.11.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ரயில் பாதை திட்டங்களில், தாம்பரம்-செங்கல்பட்டு (4-வது பாதை), ஜோலார்பேட்டை-கோவை (3-வது மற்றும் 4-வது பாதைகள்),கோவை-சொர்னூர் (3-வது மற்றும் 4-வது பாதை) மற்றும் அரக்கோணம்-ரேணிகுண்டா (3-வது மற்றும் 4-வது பாதை) ஆகியவை அடங்கும்.
தஞ்சாவூர்- திருவாரூர்- காரைக்கால் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இரட்டிப்புத் திட்டம் குறித்தும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட வேண்டிய மொத்த ரயில் பாதைகளின் நீளம் சுமார் 576 கி.மீ. இதில், ஜோலார்பேட்டை-கோயம்புத்தூர் பாதை 282 கி.மீ. நீளம் கொண்டது. இந்தப் பகுதியை கணக்கெடுக்க ரூ.5.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது பாதையின் நீளம் 31 கி.மீ. இதன் கணக்கெடுப்பாக ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் பெரும்பாலான நேரங்களில் கூட்டம் நிரம்பிவழியும். எனவே, பயணிகள் நெரிசலைக் குறைக்க கூடுதல்பாதை அமைக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையொட்டி, முதல்கட்டமாக தற்போது இந்தப்பாதையில் கணக்கெடுப்பு நடத்தஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 3 வழித்தடங்கள் உள்ளன. நான்காவது பாதை அமைக்கப்பட்டால், பயணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். தொடர்ந்து, ரயில் சேவைகள் எண்ணிக்கை அதி கரிக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT