

புதுச்சேரி: பட்ஜெட்டில் அறிவித்த புதிய திட்டங்களை குடியரசுத்தலைவர் வரும் ஜூன் 6, 7-ல் தொடங்கி வைக்க இருப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர்ரங்கசாமி நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களையும், கடந்த காலத்தில் அறிவித்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவோம். அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியை மேலும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜிப்மரில் சிகிச்சை கட்டணம் பெறக் கூடாது.
எப்போதும் போல் மக்களுக்கு மருத்துவச் சேவை கிடைக்கவேண்டும் என்று மத்திய அரசிடம்வலியுறுத்துவேன். அனைவருக் கும் மருத்துவக் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. சென்டாக் மாணவர் சேர்க்கை குறித்த நேரத்தில் நடைபெறும்.
மாநில அந்தஸ்து தீர்மானம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விரைவில் சந்தித்து வலியுறுத்துவோம். இதில் வெற்றி கிடைக் கும் என்ற நம்பிக்கையுள்ளது.
பட்ஜெட்டில் அறிவித்த பெண்குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்வைப்புத்தொகை, காஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், புதுவையில் சித்த மருத்துவக் கல்லுாரி ஆகிய அறிவிப்புகளை தொடக்கி வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜூன் 6-ம்தேதி புதுச்சேரி வருகிறார். 6 மற்றும் 7-ம் தேதிகளில் இருநாட்களில் இத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிய சட்டப்பேரவை கட்டுவதற்கான பணிகள் விரை வுப்படுத்தியுள்ளோம்.
தமிழகத்துடன் புதுச்சேரிக்கு நல்ல நட்புறவு உள்ளது. புதுவைமாநிலத்தையொட்டிய தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களுடன் பழைய நட்புறவு தொடரும். அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அதிமுக அவர்களுடைய கருத்தை கூறியிருக்கலாம். எங்களது அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது.
மீனவர்களுக்கு குறித்த நேரத்தில் தடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளோம். புதிதாக 25 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத் துள்ளோம். உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.