Published : 09 May 2023 06:00 AM
Last Updated : 09 May 2023 06:00 AM
திருப்பத்தூர்: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 328 பொது நலமனுக்களை பெற்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. சுவாமி வீதி உலா வரும் வழியில் தேவாலயம் கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தேவாலயம் கட்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.
திருப்பத்தூர் அடுத்த சின்ன வெங்காயபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மலர் அளித்த மனுவில், ‘‘எனது மகன், என்னிடம் இருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 3.5 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார். எனவே, எனது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம், அனுமத்தபுரம் பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவர் கொடுத்த மனுவில், ‘‘ஆத்தூர்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள செந்தில்குமார், எனது மகள் அபிஷேகாவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாககூறி கடந்த 2017-ம் ஆண்டு ரூ.10 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டார்.
ஆனால், அவர் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பிக்கேட்டால் மிரட்டுகிறார். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயகுமாரி, கலால் உதவி ஆணையர் பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எனது மகன், என்னிடம் இருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 3.5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT