Published : 08 May 2023 02:41 PM
Last Updated : 08 May 2023 02:41 PM

பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிலம் - 300 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற 6 மாத கால அவகாசம்: ஐகோர்ட்

சென்னை: பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 300 ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் மறுவாழ்வுக்காக 1968-ம் ஆண்டு பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவங்கப்பட்டது. இந்த சங்கத்தின் சார்பில் சென்னை பாலவாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, அதில் 318 வீட்டுமனைகள் உருவாக்கி, சங்க உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த நிலத்தை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக கூறி, சங்கத்தின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தும்படி, தாம்பரம் தாசில்தாரருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், மாவட்ட ஆட்சியர், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தக் கோரி, பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.போஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், "குறிப்பிட்ட அந்த நிலத்தில் வசிக்கும் சுமார் 300 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் வசிக்கும் 300 ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி, நிலத்தை சங்கத்தின் வசம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், காவல் துறை உதவியைப் பெறலாம் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x